மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை:ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாதுபுதிய கட்டுப்பாடுகள் + "||" + Local leaders from using the check New restrictions

ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை:ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாதுபுதிய கட்டுப்பாடுகள்

ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை:ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாதுபுதிய கட்டுப்பாடுகள்
ஊராட்சி மன்ற கணக்குகளில் இனி காசோலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் ஊராட்சி தலைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, 

ஊராட்சி மன்ற கணக்குகளில் இனி காசோலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் ஊராட்சி தலைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. எனவே மக்கள் பிரதிநிதிகள் அங்கு இல்லாத நிலையில், தனி அலுவலர்களை நியமித்து உள்ளாட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் நடத்தப்பட்டன. இப்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவி காலம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. எல்லை மறுவரையறை பணிகளுக்காக காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளும், தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

பொறுப்பு ஒப்படைப்பு

இந்தநிலையில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் வசம் ஊராட்சி மன்ற பொறுப்புகளை உடனடியாக கீழ்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கிராம ஊராட்சியின் தனி அலுவலர், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் பொறுப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பை பெற்றுக் கொண்டதற்கான அறிக்கையை தீர்மானப் பதிவேட்டில் பதிவு செய்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

அவ்வாறு அந்த ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி தலைவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட கலெக்டருக்கு தொகுத்து அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

பதிவேடுகள் ஒப்படைத்தல்

கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் 31 விதமான பதிவேடுகள் மற்றும் ரசீது புத்தகங்களை, பொறுப்பேற்றுள்ள கிராம ஊராட்சி தலைவர் வசம் தனி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும். இப்பதிவேடுகள் அனைத்தும் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகம் தவிர வேறு எங்கும் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994 மற்றும் உரிய விதிமுறைகளின்படி ஊராட்சியின் மன்றக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

நிதி நிர்வாகம்

கிராம ஊராட்சியின் வங்கி கணக்குகளின் அனைத்து வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் ரொக்கப் புத்தகங்கள் ஆகியவற்றை புதிதாக பொறுப்பேற்றுள்ள கிராம ஊராட்சி தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும். இவ்வங்கி கணக்குப் புத்தகங்கள் மற்றும் ரொக்கபுத்தகங்கள் அனைத்தும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மட்டுமே பராமரிக்க வேண்டும்.

கிராம ஊராட்சியின் அனைத்து வங்கி கணக்குகளில் நிதிப்பரிவர்த்தனை செய்யும் விதமாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரின் மாதிரி கையெழுத்துக்கள் தொடர்புடைய வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சி நிதி நிர்வாகத்தில் அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதிகாரம் உடையவர்களான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு, தனி அலுவலரின் பதவிக்காலத்தில் உள்ள மீத இருப்புத் தொகையின் விபரத்தை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட வேண்டும்.

காசோலையில் கட்டுப்பாடு

மேலும், நிதிப்பரிவர்த்தனைகள் பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுவதால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் எவ்வாறு நிதிப்பரிவர்த்தனை செய்வது என்பதை தனி அலுவலர் விளக்க வேண்டும். பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் நடைபெறும் நிதி பரிவர்த்தனையில், ‘பிபிஏ - பிரிண்ட் பேமென்ட் அட்வைஸ்’ என்ற பக்கத்தை பதிவிறக்கம் செய்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கையொப்பமிட்டு வங்கிக்கு அனுப்ப அறிவுறுத்த வேண்டும்.

ஊராட்சி மன்ற நிதி நிர்வாகம் பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், காசோலைகள் பயன்பாடு அவசியமற்றதாகி உள்ளது. எனவே எக்காரணத்தை கொண்டும் ஊராட்சி கணக்குகளின் கீழ் காசோலைகளை பயன்படுத்த கூடாது. இருந்தாலும், ஊராட்சியில் பராமரிக்கப்படும் ஊராட்சி கணக்கு-2 என்பதில் (தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் செலுத்தும் கணக்கு) மட்டும் காசோலை மூலம் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தும் பொருட்டு, காசோலைகளை அனுமதிக்கலாம்.

ஊராட்சி கணக்கு-2ன் கீழ் வழங்கப்படும் காசோலைகளின் மீது டி.என்.இ.பி., டி.டபுள்யூ.ஏ.டி. என்ற முத்திரையிட்டு ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட பின்புதான் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

மீதித்தொகை ஒப்படைப்பு

எனவே ஏற்கெனவே பயன்படுத்திய காசோலைகள் தவிர மீதமுள்ள காசோலைகளை எவ்வித காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது. கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட காசோலையின் எண் குறிப்பிட்டு, அந்த வங்கி கணக்கில் உள்ள மீதித்தொகையை உரிய படிவத்தில் பதிவு செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீதமுள்ள காசோலைகளை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட உதவி இயக்குநருக்கு (ஊராட்சிகள்) அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு பெறப்படும் மீதமுள்ள காசோலைகளை உரிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தனது அலுவலகத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தீர்மான பதிவேடு முழுவதுமாக பக்க எண்களை உறுதி செய்து தற்போது பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.