தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி கவுரவித்தார்


தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி கவுரவித்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 8:04 AM GMT (Updated: 20 Jan 2020 8:04 AM GMT)

திருவள்ளுவர் திருநாள், சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி அறிவிக்கப்பட்ட 52 பேருக்கு விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

முன்னதாக முதல்-அமைச்சர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

உண்மையான  மூத்த மொழியாக விளங்குவது தமிழ். 14 பண்புகளை கொண்டது தமிழ் மொழி. உலக பொதுமறையாக விளங்குவது திருக்குறள். எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

தமிழறிஞர்கள் காத்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கான திறமை அங்கீகரிக்கப்பட்டு உரிய விருது அளிக்கப்படும் என்று கூறினார்.

விழாவில்  9 பேருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதும், 13 பேருக்கு சித்திரை தமிழ் புத்தாண்டு விருதும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும், 3 பேருக்கு உலக தமிழ்ச்சங்க விருதும் முதலமைச்சர் வழங்கினார். 

இதேபோல், 5 பேருக்கு மரபுவழி கலைவல்லுநர்களுக்கான விருதும், 5 பேருக்கு நவீன பாணி கலை வல்லுநர்களுக்கான விருதும், 7 பேருக்கு நூல்கள் நாட்டுடைமை-பரிவுத்தொகை விருதும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.

விழாவில் விருதுகளுடன் சேர்த்து அவர்களுக்குரிய பரிசுத் தொகைக்கான காசோலை, ரொக்கப் பரிசு, தங்க பதக்கம் உள்ளிட்டவையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டன. விழா நிறைவடைந்ததும் விருது பெற்ற அனைவரும் முதலமைச்சருடன் சேர்ந்து குழு படம் எடுத்துக்கொண்டனர்.

Next Story