ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்


ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்   விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Jan 2020 10:28 PM GMT (Updated: 21 Jan 2020 10:28 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்குமுன் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்தி, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்துபோகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது.

அதனால், விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும். மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகத்தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டியது மிக மிக அவசியமான, தேவையான ஒன்று. தமிழக டெல்டா விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்கவும், தமிழகத்தில் விளை நிலங்களையும், நீராதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல பெரம்பலூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாரிவேந்தர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

Next Story