மாநில செய்திகள்

1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் வெளியானது + "||" + 1971 Superstition Eradication Conference

1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் வெளியானது

1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு:  கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் வெளியானது
1971-ம் ஆண்டு சேலத்தில் தி.க. நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு மற்றும் ஊர்வலம் பற்றி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் பிரசுரமாகி இருந்தது.
சென்னை,

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து விலகி திராவிடர் கழகத்தை தொடங்கிய நாள் முதல் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரசாரம் செய்தார். குறிப்பாக இந்து மத புராணங்களை எடுத்து கூறி மக்கள் பகுத்தறிவு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பேசி வந்தார். இதனால் இந்துக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

இந்த நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23, 24-ந் தேதிகளில் சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் “மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு” நடந்தது. 2 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் 2-வது நாள் ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பெரியார் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த்

அன்று நடந்த இந்த நிகழ்வு இப்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு பூதாகரமாக வெடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு தெரிந்தோ, தெரியாமலோ வித்திட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகை விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டு நடந்த தி.க. ஊர்வலத்தை எடுத்து கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரலாற்று சம்பவத்தை தவறாக குறிப்பிட்ட ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நேற்று அறிவித்தார். தான் பத்திரிகையில் வந்த தகவலின் அடிப்படையிலும், அப்போது நேரில் பார்த்த லட்சுமணன் சொன்ன தகவலின் அடிப்படையிலும்தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார்.

ஆனால் ரஜினிகாந்த் சொன்னது உண்மையா? அல்லது திராவிடர் கழகத்தினர் தற்போது சொல்வது உண்மையா? என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

கருணாநிதி கருத்து

இந்த சம்பவம் நடக்கும்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அவர் அப்போது சேலத்தில் பெரியார் நடத்திய மாநாடு பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அது ‘தினத்தந்தி’யில் 1-2-1971 அன்று செய்தியாக வெளிவந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதியிடம், “சேலத்தில் நடைபெற்ற மாநாடு பற்றி நாட்டில் பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறதே? போலீசார் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததாகவும் கூறப்படுகிறதே...” என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கருணாநிதி கூறிய பதில் வருமாறு:-

வருந்துகிறேன்

சேலத்தில் நடைபெற்றது, திராவிடர் கழக மாநாடு. தி.மு.கழக மாநாடு அல்ல. ஒரு பெண் பலபேரை விரும்பலாம் என்பது காட்டுமிராண்டி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முறை. அது பழையகால சரித்திர இதிகாசங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை. அது பகுத்தறிவு காலத்திற்கு ஒத்துவராது.

ஒரு பெண் பல கணவர்களை விரும்பலாம் என்ற கருத்துப்பட சேலம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றும், விவாகரத்தை வலியுறுத்தத்தான் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், ஆனால் அதற்கு மாறாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும், பெரியாரின் விடுதலை பத்திரிகையில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மதவாதிகள் மனம் புண்படும்படியாக ராமர் சிலை போன்றவைகளை சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் ஆபாசப்படுத்தியதாகவும் வந்த செய்தி கண்டு நான் வருத்தப்படுகிறேன்.

மதவாதிகளானாலும், அரசியல்வாதிகளானாலும் அவர்கள் மனம் புண்படும்படியாக எந்த பிரசாரம் நடத்தப்பட்டாலும் அதை இந்த அரசு விரும்பவில்லை.

செருப்பு மாலை

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது 1967-ல் நடைபெற்ற தேர்தலில் கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு திராவிடர் கழகத்தினர் செருப்பு மாலை போட்டு வைத்ததை அப்போதிருந்த காமராஜரும் கண்டிக்கவில்லை. ஆட்சியும் கண்டிக்கவில்லை. அப்போது பார்த்துக்கொண்டிருந்ததை போல் இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் எண்ணிவிட்டார்கள் போலும்.

இது மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறாமல் அரசாங்கம் கண்காணிக்கும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அப்போது நிருபர்கள், “அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டனர்.

அதற்கு கருணாநிதி, “இது சம்பந்தமாக போலீசாரிடத்தில் விளக்கம் கேட்க அரசாங்கம் போலீஸ் மேல் அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறது. பெரியாரைப் பொறுத்தவரை புரட்சிகரமாக சிந்திக்க உரிமை உண்டு. ஆனால் அவர் சிந்திக்கும் அனைத்தையும் செயல்படுத்துவதற்கு ஒரு அரசாங்கம் சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது” என்று பதில் கூறினார்.

வழக்கு தள்ளுபடி

இது தொடர்பாக பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியும் 30-8-1971 அன்று ‘தினத்தந்தி’யில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையொட்டி கடவுள்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஊர்வலத்தை நடத்தியதாக ஈ.வெ.ரா. பெரியார், டி.வி.சொக்கப்பா, கே.பச்சமுத்து, ஆர்.நடேசன், திருவாரூர் தங்கராசு ஆகிய 5 பேர் மீது ஜெயராமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சேலம் மாவட்ட மாஜிஸ்திரேட்டு எம்.கே.சேது மாதவன் இதை விசாரித்து ஈ.வெ.ரா. பெரியார் மீது உள்ள குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து மற்ற 4 பேருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அப்பீல்

இதை எதிர்த்து சேலம் மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜெயராமன் அப்பீல் செய்தார். “ஈ.வெ.ரா. பெரியாருக்கும் சம்மன் அனுப்ப வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என்று ஜெயராமன் தன் மனுவில் கூறியிருந்தார்.

சேலம் மாவட்ட செசன்சு நீதிபதி எஸ்.சாமிக்கண்ணு இந்த அப்பீல் மனுவை விசாரித்தார். ஈ.வெ.ரா. பெரியாரை விசாரிக்க தேவை இல்லை என்று மாவட்ட மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறியது சரிதான் என்று கூறி அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேற்கண்டவாறு ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி - சென்னையில் 20-ந்தேதி தொடங்குகிறது
‘தினத்தந்தி’ மற்றும் ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னையில் 20-ந்தேதி(நாளை மறுதினம்) தொடங்குகிறது.