மாநில செய்திகள்

பெரியார் குறித்து கருத்து: ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன் + "||" + Strong police security at Rajinikanth's home

பெரியார் குறித்து கருத்து: ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன்

பெரியார் குறித்து கருத்து:  ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு  மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன்
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளதால், அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் போயஸ் கார்டன் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.
சென்னை,

சென்னையில் சமீபத்தில் நடந்த ‘துக்ளக்’ பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “1971-ம் ஆண்டில் சேலத்தில் ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார்”, என்று குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஆனாலும் தனது கருத்து குறித்து நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் ஆணித்தரமாக தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக்கி இருக்கிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் ரஜினிகாந்த் வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கதீட்ரல் சாலை-பின்னி சாலை சந்திப்பு, போயஸ் கார்டன் சந்திப்பு, ரஜினி வீடு முன்பு என 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். அந்த வழியாக செல்வோர் அனைவரையும் போலீசார் விசாரித்து அனுப்புவதை பார்க்க முடிகிறது.

50-க்கும் மேற்பட்ட போலீசார் போயஸ் கார்டனில் நிறுத்தப்பட்டு உள்ளனர். முறையான அனுமதி பெற்று வருவோரை தவிர யாரையும் ரஜினிகாந்த் வீடு அமைந்திருக்கும் தெருவில் நுழைய போலீசார் அனுமதிப்பதில்லை. மேலும் அருகில் உள்ள செம்மொழி பூங்காவிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். போயஸ் கார்டன் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் வந்திருக்கிறது.

பரபரப்பாகும் போயஸ் கார்டன்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் வசித்தபோது அவரை காண ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்து விடுவார்கள். இதையொட்டி போயஸ் கார்டனில் பல அடுக்குகளாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருப்பார்கள். கெடுபிடிகளும் அதிகமாகவே இருக்கும். போலீசாரின் அனுமதி பெற்றே போயஸ் கார்டனில் நுழையும் நிலை இருந்தது. எந்நேரமும் காவல் வளையத்துக்குள் போயஸ் கார்டன் ஆட்பட்டிருக்கும்.

தற்போது பெரியார் குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து, போயஸ் கார்டனில் பல அடுக்குகளாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள். இதனால் போயஸ் கார்டன் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.