தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 17% சரிவு


தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 17% சரிவு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:04 AM GMT (Updated: 23 Jan 2020 10:04 AM GMT)

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் சரிவடைந்து உள்ளது.

சென்னை

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 17 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் தேசிய அளவில் 74 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர் என  தேசிய தேர்வு முகமையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த கல்வியாண்டில், தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து 1.23 லட்சம் பேர் தேர்வு எழுதி அதில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 17 சதவீதம் குறைவு என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கட் - ஆஃப் மதிப்பெண் குறைதல், நீட் தேர்வில் பழைய மாணவர்கள் அதிக இடங்களைப் பிடித்தல், மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டம் உள்ளிட்டவை காரணமாக நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த 4,202 பேரில் 2,916 ( 70 சதவீதம்) பேர் பழைய மாணவர்கள் என்ற விவரத்தை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

11 மற்றும் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் காரணமாக, இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் ஓராண்டு காலம் முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வை எழுத வாய்ப்பு அதிகம் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Next Story