ஆந்திராவை சேர்ந்த சட்டக்கல்லூரி முதல்வர் கைது மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு


ஆந்திராவை சேர்ந்த   சட்டக்கல்லூரி முதல்வர் கைது    மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Jan 2020 9:37 PM GMT (Updated: 23 Jan 2020 9:37 PM GMT)

ஆந்திராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி முதல்வர் ஒருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தனது கல்லூரியில் வக்கீலுக்கு படித்த மாணவர்களுக்கு போலியான சான்றிதழ்கள் வழங்கியதாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த விபின் (வயது 59) என்பவர் தெற்கு ரெயில்வேயில் ‘கார்டு’ ஆக வேலை செய்து வந்தார். ரெயில்வேயில் வேலை செய்து கொண்டே அவர் அந்த துறையில் உரிய அனுமதி பெறாமல், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எஸ்.பி.டி.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ‘எல்.எல்.பி.’ சட்டப்படிப்பு படித்துள்ளார். சட்டக்கல்லூரி தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் 70 சதவீதம் வருகை பதிவேடு கட்டாயம் இருக்கவேண்டும்.

ஆனால் விபின் ரெயில்வேயில் வேலை செய்துகொண்டே சட்டக்கல்லூரிக்கு நேரடியாக செல்லாமல் சென்றதாக, போலியான வருகை சான்றிதழ் பெற்று சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால் அந்த மனுவினை பார் கவுன்சில் நிராகரித்துவிட்டது. இதையடுத்து மோகன்தாஸ், உலகநாதன் ஆகிய வக்கீல்கள் உதவியோடு தமிழக பார் கவுன்சிலில் பதிவு செய்ய விபின் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ரெயில்வே ‘கார்டு’ விபின் மற்றும் வக்கீல்கள் மோகன்தாஸ், உலகநாதன் ஆகியோரை ஐகோர்ட்டு போலீசார் கைது செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார்

இந்த வழக்கு மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கவுதமன் தலைமையிலான தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள்.

விபின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வக்கீல் பட்டம் பெறுவதற்காக அந்த கல்லூரி சார்பில் போலியான வருகை பதிவேடு சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. விபினுக்கு வழங்கப்பட்டது போல அந்த கல்லூரியில் படித்த ஏராளமான மாணவர்களுக்கு போலியான வருகை பதிவேடு சான்றிதழ்கள் வழங்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

கல்லூரி முதல்வர் கைது

இதன்பேரில் அந்த சட்டக் கல்லூரியின் முதல்வர் ஹிமவந்தகுமார் (54) என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ரவீந்திரா நகரை சேர்ந்தவர்.

இந்த கல்லூரியில் வக்கீல் பட்டம் படித்த ஏராளமானோர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும், போலி சான்றிதழ் வழங்குவதற்கு உதவியாக இருந்த மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Next Story