நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல்  தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள்   எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்   அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 24 Jan 2020 12:15 AM GMT (Updated: 23 Jan 2020 10:27 PM GMT)

குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை, 

ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

எந்த கடையிலும் வாங்கலாம்

இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க வகை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி

இந்த திட்டம் முதல் கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த மாவட் டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், அங்குள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட் கள் வாங்கி கொள்ளலாம். பின்னர் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்

கடந்த 2014-ம் ஆண்டு ரூ.318.40 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள பொதுவினியோக திட்டம் கணினி மயமாக்கப்பட்டது. இந்த திட்டம் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

மேலும் அதில் எஸ்.எம்.எஸ். தகவல்கள் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. இந்தநிலையில் மாநிலங்களுக்கு இடையே ரேஷன் அட்டையை பயன்படுத்துவது தொடர்பான விளக்கத்தை குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனர் கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு அனுப்பி இருந்தார்.

அதில் அவர் கூறிஇருப்பதாவது:-

மக்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் தமிழகத்தில் பொதுவினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு

தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள், கூட்டுறவு முகமைகள், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகம், மகளிர் சுய உதவிகுழுக்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 9 ஆயிரத்து 632 கடைகள் பகுதி நேர கடைகளாகும். ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் இணையதள வசதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யார், யாருக்கு? என்ன பொருள் வழங்கப்படுகிறது? என்பது பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரத்து 379 குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில் பொருட்களை வாங்கிக்கொள்ளமுடியும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

சாப்ட்வேர் மாற்றம்

இந்தநிலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனர் சில நடைமுறைகளை கடைபிடித்து, அதன்மூலம் மாநிலத்தின் உள்ளே அனைத்து பகுதிகளிலும் ரேஷன் அட்டைகள் பயன்பாட்டு திட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 20 சதவீதம் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் ‘ஆன்லைன்’ மூலமான வினியோகம் பலப்படுத்தப்படுவதோடு, ‘ஆப்லைன்’ விற்பனையை தடுக்கமுடியும்.

ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரரும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பொருட்களை ‘ஸ்மார்ட்’ ரேஷன் அட்டை மூலமாகவோ, ஆதார் அடையாள அட்டை மூலமாகவோ அல்லது அதில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மூலமாகவோ (ஓ.டி.பி. உதவியுடன்) பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும். எனவே இதற்கு ஏற்ப தற்போது ஆன்லைன் வினியோகத்துக்காக பயன்படுத்தப்படும் விற்பனை உபகரணங்களில் ‘சாப்ட்வேர்’ (மென்பொருள்) மாற்றம் செய்யப்படவேண்டும்.

பரீட்சார்த்த முறை

அது ‘ஸ்மார்ட்’ ரேஷன் அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கவேண்டும். ரேஷன் பொருட்களை அருகில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கமுடியாத அடிக்கடி இடம் மாறுதலுக்கு உட்படும் தொழிலாளர்களுக்கு இது மிகுந்த பயன் உள்ள திட்டமாக இருக்கும். மேலும் ஒவ்வொருவரும் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப அருகில் உள்ள ரேஷன் கடைகளை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

மேலும் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனர் தனது கடிதத்தில், தமிழ்நாட்டுக்குள் அனைத்து இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் வசதி தற்போது தயாராக இருக்கிறது. எனவே பரீட்சார்த்த முறையில் அறிந்துகொள்வதற்கு வசதியாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மட்டும் இந்த திட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கவேண்டும். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்தலாம் என்று கூறி இருந்தார்.

நிர்வாக ஒப்புதல்

அவருடைய இந்த முன்மொழிவை அரசு கவனத்துடன் பரிசீலித்தது. தமிழகத்துக்குள் எந்த ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்குகிறது. இதற்கு சில நிபந்தனைகளை ஏற்படுத்தும்படி, கமிஷனருக்கு அரசு உத்தரவிடுகிறது. ரேஷன் பொருட்களை எளிதாக வாங்கிக்கொள்வதற்கு வசதியாக அத்தியாவசிய பொருட்களில் 5 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும். இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக தமிழகத்தில் அமல்படுத்தப்படவேண்டும். முதலில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு அதை அறிமுகம் செய்துவிட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story