கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்தியாவிலேயே இல்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்


கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்தியாவிலேயே இல்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 25 Jan 2020 8:46 AM GMT (Updated: 25 Jan 2020 8:46 AM GMT)

கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்தியாவிலேயே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தீவிரமுடன் பரவி அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்.  பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.

முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேர் பலியாகி உள்ளனர் என வுகான் நகர சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது.  இதனை தொடர்ந்து, வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்த வைரஸ் 440 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர்.  ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.  ரெயில்வே நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.  வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் நேற்று வரை வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்தனர்.  இந்நிலையில், இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.  இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.  பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  அவர்களில் 11 பேர் ஆண்கள்.  4 பேர் பெண்கள்.  சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Next Story