மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது   ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2020 11:58 PM GMT (Updated: 25 Jan 2020 11:58 PM GMT)

மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நேற்று நடைபெற்றது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார்.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் ஆக முடியாது

தமிழ் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வந்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. செம்மொழி மாநாடு நடத்தி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வீண் அடித்தவர்கள் தி.மு.க.வினர். மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வுக்குதான் தகுதி உண்டு.

கல்வியில் தமிழகம் முதலிடம். படித்தவர்களின் எண்ணிக்கை கூடி உள்ளது. ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது. வடிவேல் காமெடி போல், “நீ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட”. கருணாநிதி உடல்நலம் நன்றாக இருந்தபோதும், சரியில்லாதபோதும் ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க நினைக்கவில்லை. அவருக்கே மகன் மீது நம்பிக்கை இல்லை. தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்?.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் பென்ஜமின், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எம்.ஏ.பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story