குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி: தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு


குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி:  தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு   சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 12:04 AM GMT (Updated: 2020-01-26T05:34:17+05:30)

குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதால் தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ந்தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் 15-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சிக்கினர்.

உச்சக்கட்ட பாதுகாப்பு

தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதிவேலைக்கு திட்டமிட்டு இருந்ததும், இதற்காக அவர்கள் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகளிடம் விசேஷ பயிற்சி பெற்றதும் தெரியவந்தது.

பயங்கரவாதிகளின் பகீர் வாக்குமூலத்தையடுத்து தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்டிரல் உள்பட கோவை, மதுரை, நாகர்கோவில் உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரை, கோவை

கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் உள்பட பஸ்நிலையங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் முக்கியமான பகுதிகளிலும், சென்னையில் உள்ள பிரபலமான கோவில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், தஞ்சை பெரிய கோவில் போன்ற வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம் பாம்பன் பாலம்

பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், பாம்பன் ரெயில் மேம்பால பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து வாகனங்கள் மூலமாகவும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையில் 15 ஆயிரம் போலீசார்

குடியரசு தின விழா பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை சாலை போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

விழா மேடை அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குடியரசு தின விழா எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி, அமைதியாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story