எவ்வளவு பணம் கைமாறியது? உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா? என்ஜினீயர் உள்பட மேலும் 4 பேர் கைது விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு


எவ்வளவு பணம் கைமாறியது? உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா?   என்ஜினீயர் உள்பட மேலும் 4 பேர் கைது   விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு
x
தினத்தந்தி 26 Jan 2020 12:15 AM GMT (Updated: 26 Jan 2020 12:06 AM GMT)

குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, என்ஜினீயர் உள்பட மேலும் 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர். கோடிக்கணக்கான பணம் கைமாறியதாக விசாரணையில் தெரியவந்து இருப்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

99 பேருக்கு வாழ்நாள் தடை

அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்த டி.என்.பி.எஸ்.சி., அவர் கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோ சனையின் பேரில் சில மணி நேரத்தில் மறையக் கூடிய சிறப்பு மையிலான பேனா (மேஜிக் பேனா) மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதைத்தொடர்ந்து குருப்-4 தேர்வு மோசடி குறித்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட், ஐ.ஜி. சங்கர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சூப்பிரண்டுகள் ரங்கராஜன், மல்லிகா, மாடசாமி, விஜயகுமார் ஆகியோரின் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் ரமேஷ் (வயது 39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக் குமரன்(35), முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ் குமார்(21) ஆகிய 3 பேரை நேற்றுமுன் தினம் கைது செய்தனர்.

முறைகேடு புகாரில் சிக்கிய தேர்வு மையங்களில் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்ட கீழக்கரை, ராமேசுவரம் தாசில்தார்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று மேலும் 4 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் இடைத்தரகர்; மற்ற 3 பேரும் தேர்வர்கள் ஆவார்கள்.

சென்னை ஆவடியைச் சேர்ந்த து.வெங்கட்ராமன்(38) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு தேர்வர்களிடம் தலா ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கோடனூர் கிராமத்தைச் சேர்ந்த மா.திருவேல்முருகன் (31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிறுகிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜசேகர் (26), ஆவடி கவுரிப்பேட்டையைச் சேர்ந்த மு.காலேஷா(29) ஆகிய 3 பேர் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

என்ஜினீயர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தில் கைது செய்யப்பட்ட ராஜசேகர் என்ஜினீயர் ஆவார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன், அய்யனார்கோவில் பாட்டை தனலட்சுமிநகரைச் சேர்ந்த சிவராஜ், விருத்தாசலம் அருகே உள்ள நறுமணம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி(32) ஆகிய 4 பேரும் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் சீனுவாசனும், சிவராஜும் ராஜசேகரின் உறவினர்கள் ஆவார்கள்.

கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் நேற்று சிறுகிராமத்துக்கு சென்று ராஜசேகரை கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். இதேபோல் நறுமணம் கிராமத்துக்கு சென்று மகாலட்சுமியை பிடித்து கடலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவர் மூலம் ராஜசேகர் குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்காக பணம் கொடுத்து ராமேசுவரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதியது தெரியவந்தது. தேர்வில் இவர் 300-க்கு 256 மதிப்பெண்கள் எடுத்து தர வரிசையில் முதல் 50 பேர்களில் இடம் பிடித்தார். ராஜசேகர் தற்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

தப்பி ஓட்டம்

ராஜசேகர் கைதான தகவல் அறிந்த சீனுவாசன், சிவராஜ் ஆகிய 2 பேரும் வெளியூருக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.

மகாலட்சுமி பி.காம். பட்டதாரி ஆவார். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமி போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்தாலும் குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதால் விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்துவிட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

11 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் யார்- யாரெல்லாம் குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட இடைத்தரகர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

முதல் கட்டமாக அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் யார்-யார்?, அவர்களில் அதிக வயதுடையவர்கள் யார்-யார்? என விசாரித்தனர். இதில் சந்தேகத்திற்குரிய 11 பேரின் பெயர்கள் மற்றும் அவர்களின் வீட்டு முகவரியை சேகரித்தனர்.

அவர்களில் சிலரை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். மேலும் சிலரது வீடுகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

இளம்பெண்

அதோடு குரூப்-4 தேர்வில் தோல்வியடைந்த உளுந்தூர்பேட்டை தாலுகா கீழ்எடையாளத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணையும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரித்தனர். அவரிடம், அந்த 11 பேரின் பெயர், முகவரியை குறிப்பிட்டு அவர்களில் யாராவது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டனர். விசாரணைக்குப்பின் அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 11 பேரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிந்ததும் சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம்

இதேபோல் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் அய்யப்பன் (35) மற்றும் அருகில் உள்ள ஆவுடையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று விஜயாபதி கிராமத்துக்கு சென்று அய்யப்பனை மடக்கிப்பிடித்தனர். இவர் அங்கு சலூன் கடை நடத்திக் கொண்டு, நிலத்தரகராகவும் செயல்பட்டு வருகிறார்.

விசாரணையில், குரூப்-4 தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றதோடு, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற இடைத்தரகராகவும் செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மேலும் விசாரணை நடத்துவதற்காக அய்யப்பனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரத்துக்கு அழைத்துச்சென்றனர்.

ஆவுடையாள்புரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் ரூ.12 லட்சம் வரை கொடுத்து இந்த தேர்வில் வெற்றி பெற்றதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.10 கோடிக்கு மேல் கைமாறியதா?

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக பல பரபரப்பான தகவல்கள் வெளியாவதாலும், தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும் 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறப்பட்டு இருப்பதாகவும், அந்த வகையில் ரூ.10 கோடிக்கும் மேல் கைமாறி இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இந்த மோசடியில் உயர் அதிகாரிகள் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குருப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள், இடைத்தரகர்கள் பட்டியலை சி.பி.சி.ஐ.டி. தயார் செய்து உள்ளனர். எனவே அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங் களில் அதிரடி சோதனை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு?

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ பதவிகளுக்கான தேர்விலும் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பணிகளில் சேர்ந்து ஊதியம் பெறுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அவர்களை பற்றிய விவரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

Next Story