டி.ஆர்.பாலு எம்.பி.யிடம் இருந்து பதவி பறிப்பு: தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்


டி.ஆர்.பாலு எம்.பி.யிடம் இருந்து பதவி பறிப்பு: தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 8:56 PM GMT)

தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பாலு எம்.பி.யிடம் இருந்து இந்தப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்து வந்தபோது, அக்கட்சியில் முதன்மை செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சமயத்தில், துரைமுருகன் முதன்மை செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, செயல் தலைவராகவும், பொருளாளராகவும் இருந்து வந்த மு.க.ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட்டார். செயல் தலைவர் பதவி நீக்கப்பட்ட நிலையில், பொருளாளர் பதவி முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால், முதன்மை செயலாளராக யார் அறிவிக்கப்படுவார்? என்ற கேள்வி தி.மு.க. வட்டாரத்தில் எழுந்தது. காரணம் என்னவென்றால், பொருளாளர் பதவியை விட முதன்மை செயலாளர் பதவி முக்கியமானதாக தி.மு.க.வில் கருதப்படுகிறது. எனவே, துரைமுருகனைவிட கட்சியில் பெரிய ஆள் யார்? என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி, தி.மு.க. முதன்மை செயலாளராக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டார். சுமார் 1¼ ஆண்டு அப்பதவியில் அவர் இருந்து வந்த நிலையில், தற்போது பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முதன்மை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு எம்.பி., கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால், அவருக்குப் பதிலாக, தி.மு.க. தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக கே.என்.நேரு இருந்து வருகிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில், உணவுத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து துறை அமைச்சராக அவர் இருந்திருக்கிறார். லால்குடி தொகுதி மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தலா 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருச்சியில் உள்ள 14 ஒன்றியங்களையும் தி.மு.க. கைப்பற்றியது. அதற்கு, மாவட்ட செயலாளராக இருக்கும் கே.என்.நேரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே, அவரை கவுரவிக்கும் வகையில் கட்சித் தலைமை அவருக்கு மாநில பதவி வழங்கவுள்ளதாகவும் ஏற்கனவே, தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பான முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வரும் திருச்சி மாவட்ட செயலாளர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. தலைமையோ திருச்சி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதாவது, திருச்சி மாவட்டத்தை இரண்டாக பிரித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முன்னாள் துணை மேயர் அன்பழகன் ஆகியோரை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளான டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, க.பொன்முடி ஆகியோரின் மகன்களுக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், இந்த ஆண்டு மே மாதம், ‘நமக்கு நாமே’ பயணத்தை போல், மீண்டும் ஒரு தமிழக சுற்றுப்பயணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

Next Story