குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் கவர்னர் தேசிய கொடி ஏற்றினார் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்


குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் கவர்னர் தேசிய கொடி ஏற்றினார் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 27 Jan 2020 12:00 AM GMT (Updated: 2020-01-27T03:24:49+05:30)

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை,

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக காந்தி சிலை அருகே மேடையும், விழா பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 6.30 மணியில் இருந்தே அங்கு மக்கள் வரத் தொடங்கினர். 7 மணிக்கு மேல் அரசு உயர் அதிகாரிகள் வந்த வண்ணம் இருந்தனர். 7.20 மணியளவில் அமைச்சர்கள் வந்து மேடையில் அமர்ந்தனர்.

7.52 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் வந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் சென்னை போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். காரில் இருந்தபடி சாலையில் இருபுறமும் கூடியிருந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையசைத்து குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் விழா மேடையை ஒட்டி இருந்த அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே காரில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கினார். அவரை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவரைத் தொடர்ந்து 7.54 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தார். மோட்டார் சைக்கிள்களில் விமானப்படை வீரர்கள் அணிவகுத்து வர, அவர் காரில் வந்து இறங்கினார். அவரும் கையசைத்து பார்வையாளர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

கவர்னரை அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பி.நாகேஷ் ராவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ஜியோதிஷ் குமார், விமானப்படை அதிகாரி மான்சிங் அவானா, கடலோர காவல் படையின் ஐ.ஜி. கமாண்டர் பரமேஷ், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஜெயந்த் முரளி ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்த கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். விழாவுக்கு வந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்த பகுதியில் மலர் தூவியது.

அதைத் தொடர்ந்து அணி வணக்க நிகழ்ச்சி நடந்தது. ராணுவப்படை, கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை, ரேடார், செயற்கைகோள் போன்றவைகளின் மாதிரிகளுடன் விமானப்படை வாகனமும்; நவீன துப்பாக்கிகள், பீரங்கியுடன் ராணுவ வீரர்களின் வாகனமும்; ராணுவ கனரக தொழிற்சாலை வாகனமும்; போர்க் கப்பலுடன் கடற்படை வாகனமும் அணிவகுத்து வந்தன.

அதைத் தொடர்ந்து கடலோரக் காவல்படை, முன்னாள் ராணுவத்தினர் படைப் பிரிவு, சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஆர்.பி.எப். படைப் பிரிவுகள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆண்கள், பெண்கள் படை), ஆண், பெண் கமாண்டோ படை பிரிவினர், நீலகிரி படைப்பிரிவு, கடலோர பாதுகாப்பு குழு, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண-சாரணியர் அணிவகுப்பும், அவர்களது இசைக் குழுவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. அணி வகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. பதக்கம் பெற்ற அனைவரும் முதல்-அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் தமிழக போலீசாரின் இருசக்கர வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. மோட்டார் சைக்கிளை கையைவிட்டு ஓட்டியபடி போலீசார் சாகசங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில், சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மணிலால் எம்.மேத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் சென்னை ராணிமேரி கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, வேப்பேரி குரு ஸ்ரீசாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளும் பங்கேற்று நடனமாடினர். அவர்கள் வண்ண வண்ண உடையணிந்தபடி, “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற பாரதியாரின் பாட்டுக்கு (இசை ஸ்ரீகாந்த் தேவா) அழகாக நடனமாடினர்.

இந்த கலை நிகழ்ச்சிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. பள்ளிகள் பிரிவில், பெத்தேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசை வென்றது. மணிலால் எம்.மேத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முறையே இரண்டாம், மூன்றாம் பரிசைப் பெற்றன.

கல்லூரி பிரிவில் குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கல்லூரி முதலாம் பரிசை வென்றது. ராணிமேரி கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை பெற்றன.

அதைத் தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் அருணாசல பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலத்தவர்கள் நாட்டியமாடி மகிழ்வித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தென்னக பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்தது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் மாநிலத்தவர் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

அதன் பின்னர் தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 16 அரசுத் துறைகள் பங்கேற்றன. அந்தந்தத் துறையின் திட்டங்களை விளக்கும் வகையில் ஊர்திகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வேளாண்மைத் துறையின் ஊர்தியில், பனைமரம், நுங்கு, பனங்கிழங்கு மற்றும் பல்வேறு பழங்களை வைத்து அலங்கரித்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

சிறப்பாக வடிவமைப்பு செய்யப்பட்டிருந்த காவல் துறையின் ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதில், குற்றங்களுக்கு முக்கிய துப்புகளை வழங்கும் சி.சி.டி.வி. ராட்சத அளவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. இரண்டாம் பரிசை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையும், மூன்றாம் பரிசை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும் பெற்றன. இறுதியில் தீயணைப்புத் துறையின் நவீன வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன.

காலை 9.10 மணிக்கு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் தனது இல்லத்துக்கு விடைபெற்றுச் சென்றார்.

குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக, காந்தி சிலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பந்தல் போடப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ப.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹீ, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

குடியரசு தின விழா விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் - 2020 (அரசு ஊழியர் பிரிவு), நாகப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஓட்டுனர் ராஜாவுக்கு (கிணற்றில் விழுந்த குழந்தையை, கிணற்றுச் சுவரில் கைகளால் துளையிட்டு, மண் சரிந்து அமுக்கிவிடும் வாய்ப்பு இருந்தாலும், துணிச்சலுடன் உள்ளே புகுந்து மீட்டவர்) கிடைத்தது.

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் (பொதுமக்கள் பிரிவு) மறைந்த ஏகேஷ், பிரின்ஸ்டன் பிராங்களின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார் ஆகியோருக்கு கிடைத்தது. சென்னையை அடுத்த கொண்டஞ்சேரி அருகே கடந்த டிசம்பர் 25-ந் தேதி பவானி என்ற பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோவை இவர்கள் 5 பேரும் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஏகேஷ் இறந்துபோனார். பிரின்ஸ்டன் பிராங்களினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களும் காயமடைந்தனர்.

ஆபத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இந்த 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. ஏகேஷ் தரப்பில் அவரது தந்தை தியாகராஜன், பிரின்ஸ்டன் பிராங்களின் தரப்பில் அவரது தாயார் அசோக்குமாரி பதக்கத்தைப் பெற்றனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் தனலட்சுமி (தன்னிடமிருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்ற திருடனுடன் துணிச்சலுடன், கத்தியால் காயம் ஏற்படுத்தியபோதும் வீரமாக போராடி மக்களின் உதவியுடன் அவனை போலீசில் ஒப்படைத்தவர்); பம்மதுகுளம் வினோதினி (இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறிக்க முயன்ற 2 பேரை கீழே விழ வைத்து போலீசில் ஒப்படைத்தவர்);

தஞ்சாவூர் மாவட்டம் முத்தம்மாள்புரம் தம்பதி பழனியப்பன் - இந்திராகாந்தி (கோவிலுக்கு சென்று விட்டு அதிகாலையில் இருவரும் வீடுதிரும்பிய போது, பழனியப்பனை உள்ளே இருந்த திருடன் தாக்கி தப்பிஓட முயன்றான். அப்போது அவனது மூக்கில் இந்திராகாந்தி ஓங்கி குத்துவிட்டு நிலைதடுமாறச் செய்தார். அந்தவகையில் போராடி திருடனை பிடித்தவர்கள்) ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

மக்களிடையே நல்லுணர்வை ஏற்படுத்தி மத மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வரும் திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தைச் சேர்ந்த மு.ஷாஜ் முகமதுவுக்கு இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் விருது கிடைத்தது.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் கடந்த ஆண்டு மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.சந்திரமோகன், திருச்சி மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தே.ராஜசேகரன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் த.பூங்கோதை, விழுப்புரம் மண்டலம் மத்திய புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் என்.அழகிரி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு தலைமைக் காவலர் அ.பார்த்திபநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருதுக்கான முதல் பரிசை கோயம்புத்தூர் பந்தையசாலை காவல் நிலையம் பெற்றது. திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம் இரண்டாம் பரிசையும், தர்மபுரி நகர காவல் நிலையம் 3-ம் பரிசையும் வென்றன. அந்த காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் முறையே ஏ.சக்திவேல், பி.உலகநாதன், சி.எம்.ரத்தினக்குமார் பரிசுகளை பெற்றனர்.

திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மைத் துறை சிறப்பு விருது, ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டியைச் சேர்ந்த க.யுவக்குமாருக்கு வழங்கப்பட்டது.

Next Story