தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 27 Jan 2020 9:52 AM GMT (Updated: 27 Jan 2020 9:52 AM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

ஹாங்காங், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு,  சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே  அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற 9111-23978046 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Next Story