சட்டவிரோத பேனர் வழக்கு ; அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? -சென்னை ஐகோர்ட்டு கேள்வி


சட்டவிரோத பேனர் வழக்கு ; அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? -சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 Jan 2020 10:52 AM GMT (Updated: 2020-01-27T16:22:30+05:30)

சட்டவிரோத பேனர் வழக்கில் அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது இல்ல திருமண விழாவுக்காக நடுரோட்டில் வைத்திருந்த பேனர் சரிந்து, சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கை கடந்த செப்டம்பரில் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர், தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கவும், சட்டவிரோத பேனர்கள் வைத்ததை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தி.மு.க. சார்பில் பிரமாண பத்திரம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமக்களுக்கு இடையூறாக சட்டவிரோதமான பேனர்கள் வைக்கக்கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இதேபோன்று கடந்த அக்டோபர் 23-ந் தேதி இதுபற்றிய வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்-அவுட், ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதியன்று கட்சி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கூட்டாக உத்தரவிட்டுள்ளனர்.

கட்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு விளம்பரங்களுக்காக சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் கட்சி தலைமைக்கழகம்  அறிவுறுத்தியுள்ளது. எனவே, சட்டவிரோத பேனர்கள் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்படாது’ என்று கூறியிருந்தார். இந்த பிரமாண பத்திரத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், இதுபற்றிய வழக்கின் விசாரணையில், அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டவிரோத பேனர் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?  இதுபற்றி தமிழக உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story