குரூப்-4 தேர்வு முறைகேடு : இன்று மேலும் 3 பேர் கைது


குரூப்-4 தேர்வு முறைகேடு : இன்று மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2020 12:26 PM GMT (Updated: 27 Jan 2020 12:26 PM GMT)

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆகி உள்ளது.

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

சுமார் 16½ லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிந்தது. அதிலும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுதி இருந்ததும், அவர்கள் அனைவரும் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் குரூப்-4 தேர்வில் தில்லுமுல்லு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தபோது குரூப்-4 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி என்று தெரிந்தது. இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 99 பேர் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேரும் தலா ரூ.9 லட்சம், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது விடைத்தாளை மாற்ற செய்துள்ளனர். தேர்வுத்துறை ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் கும்பல் விடைத்தாள்களை மாற்றி உள்ளது.

99 பேரிடமும் ரூ.12 கோடி வரை பணம் வாங்கிய மோசடி கும்பலால் 39 பேரின் விடைத்தாள்களையே மாற்ற முடிந்தது. அந்த 39 பேரும் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த மோசடி உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். பணம் கொடுத்து தேர்வாக முயற்சி செய்த 99 பேரும் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மோசடி செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை இதுவரை சி.பி.சி.ஐடி. போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்கள் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.

இன்று மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.  தற்போது வரை கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story