குரூப்-4 தேர்வில் முறைகேடு: முதல் இடம் பிடித்த ஆடுமேய்க்கும் தொழிலாளி வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


குரூப்-4 தேர்வில் முறைகேடு: முதல் இடம் பிடித்த ஆடுமேய்க்கும் தொழிலாளி வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Jan 2020 8:30 PM GMT (Updated: 27 Jan 2020 7:48 PM GMT)

குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

சிவகங்கை,

சமீபத்தில் நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் பெரும் அளவில் நடந்த முறைகேடு அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குரூப்-4 தேர்வு நடைபெற்ற போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்களுடன் பல்வேறு வாகனங்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளன. அப்படி புறப்பட்ட வாகனம் ஒன்று சிவகங்கைக்கு சென்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை அங்குள்ள கருவூலத்தில் வைத்திருந்தனர்.

அந்த விடைத்தாளையும் அதே வேனில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டதாகவும், அப்போது இரவு நேரத்தில் சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேனை நிறுத்திவிட்டு சாப்பிட்டதாகவும், அப்போது அந்த வேன் டிரைவர் உதவியுடன் விடைத்தாள்கள் முறைகேடு நடந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் சிவகங்கையில் கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

குரூப்-4 தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர், அதில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர், அவர்களின் ஊர் விவரம், எழுதிய தேர்வு மையங்களின் விவரம், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர்.

சாப்பிடுவதற்காக விடைத்தாளுடன் சென்ற வேன் நடுவழியில் நிறுத்தப்பட்ட சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி பகுதிக்கும் போலீசார் விரைந்தனர். அங்கு சம்பந்தப்பட்ட ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது.

இந்த தேர்வில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார். அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் பெரியகண்ணூர் கிராமத்திலுள்ள திருவராஜ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடைய உறவினர்களிடம் திருவராஜ் பற்றிய தகவல்களை கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்றும், நாளையும் (செவ்வாய், புதன்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் முகாமிட்டு, பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story