தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர் குரூப்-4 தர வரிசையில் இடம் பிடித்த அவலம்


தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர் குரூப்-4 தர வரிசையில் இடம் பிடித்த அவலம்
x
தினத்தந்தி 27 Jan 2020 9:00 PM GMT (Updated: 27 Jan 2020 7:57 PM GMT)

குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வு மையங்களில் மோசடி நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வு மையங்களில் மோசடி நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தேர்வு எழுதி தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்த 39 பேரை சென்னைக்கு அழைத்து அவர்களின் தகுதியை சோதிக்க மறுதேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் பலர், மிகக்குறைந்த மதிப்பெண்களே வாங்கி இருப்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. அதுகுறித்த சில தகவல்களை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

குரூப்-4 தேர்வு தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்தவர்களில் பலரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. அவர்களின் திறனை அறிய வெள்ளை தாளை கொடுத்து மனு எழுதுமாறு கூறினோம். ஒரு மனுவை கூட எழுத தெரியாமல் பலர் தவித்தனர். அதிலும் ஒரு தேர்வர் மனு எழுத தொடங்கியபோது, பெறுநர் என்பதற்கு பதிலாக பேறுநர் என்றும், எழுத்துப்பிழையாக வாசகங்களை எழுதி அனைவரையும் அதி்ர்ச்சி அடையச் செய்தார். இதுகுறித்து கேட்டபோது, தமிழ் தனக்கு சரியாக வராது என்று மழுப்பலாக தெரிவித்தார். அப்படியென்றால் ஆங்கிலத்தில் எழுதுமாறு கூறினோம். அதற்கு அந்த தேர்வர் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தார். அப்போதுதான் தெரிந்தது அவருக்கு ஆங்கிலமும் தெரியாது என்பது. இதுபோன்ற நபர்கள் மோசடி பேர்வழிகளின் மூலம் பல லட்ச ரூபாய் பணம் கொடுத்து அரசு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று விடுவதோடு, தர வரிசையில் இடம்பிடித்து அரசின் நிர்வாகத்தை கையாளும் முக்கிய துறைகளில் பணியில் சேர்ந்து விடுவதுதான் வேதனைக்குரிய விஷயம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story