அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்த தி.மு.க.வினரை கைது செய்வதா? “கோவையில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்” மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்த தி.மு.க.வினரை கைது செய்வதா? “கோவையில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்” மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 10:45 PM GMT (Updated: 27 Jan 2020 8:41 PM GMT)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்த தி.மு.க.வினரை தொடர்ந்து கைது செய்தால், கோவைக்கு வந்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபைக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றிப் பேசியதற்காக, தி.மு.க. முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஏ.வி.முத்துலிங்கத்தைக் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கிராம சபை என்பது மக்களின் சுதந்திரமான கருத்துகளை, எண்ணங்களை உள்ளது உள்ளபடிப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான கருத்துக் கேட்கும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு முன்னாள் கவுன்சிலர் என்ற முறையில் உரிமையுடன் ஒரு கருத்தைக் கூறும்போது, அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அதன் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வு காண்பதுதான் உள்ளாட்சித் துறை அமைச்சரின் பணி. ஆனால் இங்கே உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவிவிடுவது மிகவும் வெட்கக்கேடானது.

அண்மைக் காலமாக கோயம்புத்தூரிலும், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரைக் கைது செய்வது, வழக்குப்போட்டால் அவர் களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் தி.மு.க.வினரைச் சிறைப்பிடிப்பது என அட்டூழியத்திலும் அராஜகமான நடவடிக்கைகளிலும் சில காவல்துறை அதிகாரிகள் ‘பேயாட்டம்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, கோவைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், இதுபோல் செயல்படுகிறார்கள் என்பது தமிழக காவல்துறைக்கே தலைகுனிவாக அமைந்திருக்கிறது. போலீஸ் துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராக, தன் கட்டளை கேட்டு நடப்பவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக, வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது.

அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் 12 மாதங்கள்தான். அதன் பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் காவல்துறை அதிகாரிகளும், அவருடைய தூண்டுதலின் பேரில் வரும் புகார்கள் மீது எல்லாம் தி.மு.க.வினரைக் கைது செய்து துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகளும், நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.

சட்டத்தின் ஆட்சியை அமைச்சரின் ஆணைக்கேற்ற சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் அநியாயத்திற்கு, காவல்துறை கிஞ்சித்தும் துணை போகக்கூடாது. அப்படித் துணைபோய், ஒழுக்கக்கேடு தாராளமாக உள்ளே நுழைந்து விடாமல், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு காவல்துறைத் தலைவர் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story