ஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி


ஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி
x
தினத்தந்தி 27 Jan 2020 10:45 PM GMT (Updated: 28 Jan 2020 1:15 PM GMT)

ஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி மீது எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் பிரியங்கா(வயது 23), போலீஸ்காரர் திருப்பதி(38) ஆகியோர் நேற்று முன்தினம் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது டிக்கெட் பரிசோதனை செய்யும் பறக்கும் படையினர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாரிடமும் பாசை காண்பிக்கும்படி கேட்டனர். போலீசார் இருவரும் பாதுகாப்பு பணிக்காக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கிய ‘பணி கடவு சீட்டை’ காண்பித்தனர்.

ஆனால் பறக்கும் படையினர், ரெயில்வே நிர்வாகம் வழங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும். அந்த பாஸ் இருந்தால் காண்பிக்கும்படியும் கூறினர். இதனால் போலீசாருக்கும், பறக்கும் படையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் பறக்கும் படை அதிகாரி ஒருவர், பெண் போலீஸ் பிரியங்காவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அவரது பேண்ட் பையில் இருந்த பணி கடவு சீட்டை எடுத்து கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் பிரியங்கா, இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீசிடம் அத்துமீறி நடந்துகொண்ட பறக்கும் படை அதிகாரி யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி அடையாளம் காணப்படும் பட்சத்தில், உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, “பாதுகாப்பு பணிக்கு செல்லும் அனைத்து ரெயில்வே போலீசாருக்கும் ரெயில்வே நிர்வாகம் பாஸ் வழங்குவதில்லை. இதன் காரணமாகவே பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார், இன்ஸ்பெக்டர் அனுமதி பெற்ற கடவு சீட்டை பெற்று செல்கின்றனர். ஆனால் இதனை டிக்கெட் பரிசோதகர்கள் ஏற்பதில்லை. இதனால் சில நேரங்களில் பாதுகாப்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள், ரெயில்வே நிர்வாகத்துடன் கலந்து பேசி சுமுகமான முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story