தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு


தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 12:00 AM GMT (Updated: 27 Jan 2020 9:18 PM GMT)

அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக்கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

சென்னை,

சமீபத்தில் நடந்த துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக தமிழக அமைச்சர்கள் பலர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினர்.

அமைச்சர்கள் பலர் ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்த நிலையில், அமைச்சர் ஒருவர் மட்டும் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆளும் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்கள் வெளியாகின.

அதேபோன்று, பா.ஜ.க. குறித்தும், சசிகலா குறித்தும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரமும் சமூக வலைதளங்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது. பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரங்கள் அனைத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர், அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

அதன்படி, இந்த விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், ‘தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம்’ என்று அமைச்சர்களுக்கு கண்டிப்பான முறையில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதேபோன்று, சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை தொடர்பாக மக்கள் மனதில் இருந்து வரும் எதிர்மறை கருத்துகளை போக்குவதற்கு எதுபோன்ற நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து மூத்த அமைச்சர்களுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி 24) சிறப்பான முறையில் கொண்டாடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

Next Story