குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு சி.பி.சி.ஐ.டி. வேட்டை தீவிரம்


குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு சி.பி.சி.ஐ.டி. வேட்டை தீவிரம்
x
தினத்தந்தி 28 Jan 2020 12:15 AM GMT (Updated: 27 Jan 2020 9:40 PM GMT)

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சென்னை,

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது.

விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர் கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரக அலுவலக உதவியாளரான ரமேஷ்(39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக்குமரன் (35), முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ் குமார்(21) ஆகிய 3 பேர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

அப்போது, சென்னை ஆவடியைச் சேர்ந்த வெங்கட்ராமன் (38) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு தேர்வர்களிடம் தலா ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கோடனூர் கிராமத்தைச் சேர்ந்த மா.திருவேல்முருகன் (31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிறுகிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜசேகர் (26), ஆவடி கவுரிப்பேட்டையைச் சேர்ந்த மு.காலேஷா(29) ஆகிய 3 பேர் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்கள் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேசுவரம் ஆகிய தேர்வு மையங்களில் எழுதப்பட்ட விடைத்தாள்களை வேன் மூலம் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு எடுத்து வந்துள்ளனர். வழியில் வேனை நிறுத்தி குறிப்பிட்ட 99 தேர்வர்களின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து அதில் திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. அலுவலக ஊழியரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன்(45) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்த செல்போன்கள் மூலம் இடைத்தரகர்களுடன் பேசி ஓம்காந்தன் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் இடைத்தரகராக செயல்பட்ட தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால சுந்தர்ராஜ் என்பவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30), சென்னை ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தைச் சேர்ந்த வினோத் குமார் (34), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் என்ற ஊரைச் சேர்ந்த சீனுவாசன்(33) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களையும் சேர்த்து குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நேற்று பிடிபட்ட 3 பேரும் தலா ரூ.10 லட்சம் வீதம், இடைத்தரகர்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவர்களில் சீனுவாசன் இடைதரகராகவும் செயல்பட்டு இருக்கிறார். இவர் 4 பேர்களிடம் தலா ரூ.5 லட்சம் வாங்கி, அவர்கள் முறை கேடாக தேர்வு எழுதியதற்கும் உதவி செய்து உள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைதரகரான சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டிலும் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. இவரது தொழிலே இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதுதான். கோடிக்கணக்கில் இவர் பணம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

கைது செய்யப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன், விடைத்தாள்களை பார்சல் வேனில் ஏற்றி வந்த போது உடன் வந்துள்ளார். போலீசாரால் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து விடைத்தாள்களை திருத்தும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்.

இவர் இதுபோல் ஏற்கனவே ஒரு முறை வெளியூரில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிலும் இவரும், ஜெயக்குமாரும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சி.பி. சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதுபற்றி விசாரணை நடக்கிறது.

ஓம்காந்தன் இதுபோல் எத்தனை முறை விடைத்தாள்களை கொண்டு வர அனுப்பப்பட்டு உள்ளார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. விடைத்தாள் கொண்டு வரும் பணியை இவருக்கு ஒதுக்கீடு செய்த டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி யார்? அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தன், பள்ளி கல்வி இயக்குனரக அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன் ஆகிய 3 பேரும் அரசு ஊழியர்கள் ஆவார்கள். இவர்களை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் திருக்குமரன் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் குரூப்-2ஏ தேர்வில் 267 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் 37-வது இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த தேர்வை திருக்குமரன் மாமல்லபுரத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு சென்று எழுதி இருக்கிறார். இதுதவிர அந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களில் 37 பேர் ராமேசுவரம் தேர்வு மையங்களில் எழுதி இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.

இதை வைத்து பார்க்கும்போது, குரூப்-2ஏ தேர்விலும் இதேபோல் பலர் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உரிய விசாரணை நடத்தி குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story