குரூப் 4 முறைகேடு : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு


குரூப் 4 முறைகேடு : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு
x
தினத்தந்தி 28 Jan 2020 5:52 AM GMT (Updated: 28 Jan 2020 7:34 AM GMT)

குரூப் 4 முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது.

அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குரூப் 4 முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குரூப் 4 மட்டுமின்றி சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளதால், இதனை சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story