பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்


பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2020 6:23 AM GMT (Updated: 28 Jan 2020 6:23 AM GMT)

பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் ரூ.18 லட்சம் மாயமானதாக கூறப்படுகிறது. வன்முறையின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இங்கு தமிழ் தெரிந்த உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்தினால் கட்டணம் செலுத்தாமல் செல்வதை தடுக்கவே வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூல் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று பரனூர் சுங்கச்சாவடியில் வந்து நின்றது. அப்போது அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்பவருக்கும் இடையே கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே சுங்கச்சாவடி ஊழியர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகள் பெரும்பாலானோர் இடையே  மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார்  தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலின் போது ரூ.18 லட்சம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடி பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்து ஊழியர்கள்-சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பரனூர் சுங்கச்சாவடியில் வன்முறை நடந்த போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story