மாநில செய்திகள்

திருமண மண்டபத்தில் ஒரே நாளில் 2 திருமணத்துக்கு பதிவு செய்ததால் குளறுபடி இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு + "||" + Register for 2 weddings on the same day at the wedding hall Just messing up

திருமண மண்டபத்தில் ஒரே நாளில் 2 திருமணத்துக்கு பதிவு செய்ததால் குளறுபடி இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருமண மண்டபத்தில் ஒரே நாளில் 2 திருமணத்துக்கு பதிவு செய்ததால் குளறுபடி இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விதிமுறைகளை ஒரு தரப்பினர் பின்பற்றாததால் தாம்பரம் நகராட்சி திருமண மண்டபத்தில் ஒரே நாளில் 2 திருமண வீட்டார் பதிவு செய்தனர்.
தாம்பரம், 

விதிமுறைகளை ஒரு தரப்பினர் பின்பற்றாததால் தாம்பரம் நகராட்சி திருமண மண்டபத்தில் ஒரே நாளில் 2 திருமண வீட்டார் பதிவு செய்தனர். இதனால் இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த தாம்பரம், முத்துலிங்கம் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திருமண மண்டபம் உள்ளது. இங்கு முடிச்சூர் பகுதியைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நேற்றும், திருமணம் நிகழ்ச்சியை இன்றும்(புதன்கிழமை) நடைபெறுவதாக கூறி கடந்த ஜூலை மாதம் தாம்பரம் நகராட்சியில் பணம் செலுத்தி இருந்தனர்.

இவ்வாறு திருமண மண்டபத்துக்கு பணம் செலுத்தியவர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீது, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல பணம் செலுத்திய ரசீது நகலை மண்டப பராமரிப்பாளரிடமும் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் அந்த திருமண வீட்டார், அவ்வாறான விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் பணம் செலுத்தியும் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் அவர்கள் மண்டபத்தை குறிப்பிட்ட அந்த தேதிகளில் பதிவு செய்து இருப்பது உறுதியாகவில்லை.

இந்தநிலையில் திருவஞ்சேரி பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நேற்று மாலை அதே மண்டபத்தில் நடத்த திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகராட்சி பதிவேட்டில் பார்த்தபோது மண்டபம் அந்த தேதியில் காலியாக இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மண்டபத்துக்கான பணத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்திவிட்டு விதிமுறைகளின்படி அதற்கான ரசீது மற்றும் உரிய ஆவணங்களை வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். அதுமட்டுமின்றி, மண்டப பராமரிப்பாளர்களிடமும் பணம் செலுத்திய ரசீது நகலை சமர்ப்பித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை இரண்டு திருமண கோஷ்டிகளும் திருமண வரவேற்புக்கான சமையல் பொருட்களை திருமண மண்டபத்துக்கு கொண்டு வந்து இறக்கினர். அப்போதுதான் இரு தரப்பினருக்கும் அந்த குளறுபடி பற்றிய முழுவிவரமும் தெரியவந்தது.

இதனால் இரு திருமண வீட்டார்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி அதிகாரிகள், நகராட்சி விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் ஒரு தரப்பினர் நடந்து கொண்டதே இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மண்டபத்தை இரண்டாக பிரித்து, ஒரு தரப்பினர் உள்ளே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும், மற்றொரு தரப்பினர் மண்டபத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வதற்காக அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.