முதல்-அமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் விமர்சித்து வருகிறார்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமியும், அமைச்சர் களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் தர வரிசை பட்டியலில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து கடந்த 28.12.2019 அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை முரசொலி பத்திரிகையில் வெளியானது.
அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்ட 6 பேரை போலீசார் கைது செய்த விவகாரத்தில், அ.தி. மு.க. ஆட்சி குறித்து விமர்சனம் செய்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து 29.12.2019 அன்று முரசொலி பத்திரிகையில் வெளியானது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் அவதூறு கருத்துகளை தெரி வித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தரப்பில் இந்த மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நல்ல மரியாதைக்குரியவராக இருந்து வருகிறார். ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக பொறுப்பேற்று பொதுமக்கள் மத்தியில் நற்பெயருடன் ஆட்சி செய்து வருகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் வேண்டுமென்றே இழிவான, தீங்கான கருத்துகளை மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள அவதூறு கருத்து இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, மு.க.ஸ்டாலினை அவதூறு குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story