ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 2020-01-29T02:08:15+05:30)

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக்கணக்குகளில் குறைபாடு இருந்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நடிகர் ரஜினி காந்த் வருமான வரித்துறையிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால், இவரது மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஏற்கவில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார்.

மேலும் அவர், ‘வருமான வரித்துறையில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு குறைவான வரி தொடர்பான வழக்கில், மேல்முறையீடு தேவையில்லை என்றும், ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தால் அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் வழக்கு ரூ.1 கோடிக்கு குறைவானது.

எனவே, இந்த சுற்றறிக்கையின்படி அவரது வழக்கை திரும்ப பெறுகிறோம்’ என்று கூறி, அந்த சுற்றறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story