ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயரவே பொதுத்தேர்வு; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயரவே பொதுத்தேர்வு; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 29 Jan 2020 11:37 AM GMT (Updated: 29 Jan 2020 11:37 AM GMT)

ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயரவே பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை அமலில் இருந்து வந்தது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால், மாணவர்கள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும் மேலும் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது.

அதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர்.

இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டே நடத்தப்படும் என  பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்தது. இதன்படி 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

இதேபோன்று, பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளின் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.  குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் செங்கோட்டையன் கூறினார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிப்பில் சேர்வதற்கே நுழைவு தேர்வு நடக்கும்பொழுது, 5 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயரவே பொதுத்தேர்வு கொண்டு வரப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி பாகுபாடின்றி நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story