குரூப்-4 தேர்வு முறைகேடு: திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி - மு.க.ஸ்டாலின்


குரூப்-4 தேர்வு முறைகேடு: திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Jan 2020 3:27 PM GMT (Updated: 29 Jan 2020 3:27 PM GMT)

குரூப்-4 தேர்வு முறைகேடுகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. கிளார்க் தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் சினிமாக்களில் வரும் காட்சியை போல் கற்பனைக்கதைகளை மிஞ்சும் வகையில் உள்ளது.  மாநிலம் முழுவதும் நடைபெறும் கைதுகளை பார்க்கும்போது, ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடாக தெரியவில்லை.

தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் இத்தனை நாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கே போயிருந்தார். இந்த முறைகேட்டில் திமிங்கலங்களை தப்பிக்க விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். மொத்தத்தில் புரோக்கர்களின் புகலிடமாக டி.என்.பி.எஸ்.சி., மாறியுள்ளது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இது போன்று எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது. அதன் ஆணி வேர் எங்குள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.  கிளார்க் துணையுடன் முறைகேடுகள் செய்துவிட முடியும் என்றால், டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதற்கு? 

இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்காக ஜெயகுமாரை அமைச்சர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க., இளைஞர் அணியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story