திருச்சியில் பா.ஜ.க. மண்டல செயலாளர் படுகொலை; மிட்டாய் பாபு உள்பட 2 பேர் கைது


திருச்சியில் பா.ஜ.க. மண்டல செயலாளர் படுகொலை; மிட்டாய் பாபு உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2020 3:34 PM GMT (Updated: 29 Jan 2020 3:34 PM GMT)

திருச்சியில் பா.ஜ.க. மண்டல செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மிட்டாய் பாபு உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி,

திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு(வயது 39). பா.ஜ.க. பாலக்கரை மண்டல செயலாளராக இருந்தார்.

காந்திமார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.  கடந்த 27ந்தேதி அதிகாலை 6.30 மணி அளவில் விஜயரகு காந்திமார்க்கெட்டின் 6-வது நுழைவுகேட் அருகே வாகன நுழைவு கட்டண வசூலில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பென்சனர்தெருவை சேர்ந்த பாபு என்கிற மிட்டாய்பாபு (25), அவருடைய கூட்டாளிகள் 3 பேர் திடீரென விஜயரகுவை தலையின் பின்னால் அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து அவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அவரை ஓடவிடாமல் 4 பேரும் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் உயிருக்கு போராடி கொண்டு இருந்த விஜயரகுவை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் உயிரிழந்தார். இது பற்றி அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். விஜயரகுவை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விஜயரகுவின் மகளை அதே பகுதியை சேர்ந்த மிட்டாய்பாபு ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது மகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று காதலை ஏற்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட விஜயரகு மிட்டாய்பாபுவை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மிட்டாய்பாபு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜயரகுவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மிட்டாய் பாபு உள்பட குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில், மிட்டாய் பாபு உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story