சென்னையில் 6-ந் தேதி பா.ம.க. போராட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது


சென்னையில் 6-ந் தேதி பா.ம.க. போராட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது
x
தினத்தந்தி 29 Jan 2020 9:30 PM GMT (Updated: 2020-01-30T00:58:44+05:30)

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 6-ந் தேதி பா.ம.க. சார்பில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கிறது.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 2-வது முறையாக தொடரப்பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் இடஒதுக்கீடு பெறும் சமுதாயங்களின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்காவிட்டால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமாக தேவைப்படுகிறது.

ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு கிடைத்தபோது, மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க.வும் அதை திட்டமிட்டு முறியடித்துவிட்டன. அது சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும். ஆனால், அதன்பின்னர் நிலைமை சாதகமாக மாறியிருக்கிறது. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்தார். இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்று வரை உறுதியாக இருக்கிறது.

மத்திய அரசு அறிவித்த ஓ.பி.சி. கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது. அதுமட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டை பல தொகுப்புகளாக பிரித்து வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும்.

அனைத்து மக்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான் அச்சாணி எனும் நிலையில், அதை செயல்படுத்த பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்வர வேண்டும்.

2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, பா.ம.க.வின் துணை அமைப்பான பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 6-ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story