‘பாரத் நெட்’ டெண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி கேள்வி


‘பாரத் நெட்’ டெண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி கேள்வி
x
தினத்தந்தி 29 Jan 2020 10:15 PM GMT (Updated: 29 Jan 2020 7:33 PM GMT)

முறைகேடுகள் நடக்கவில்லை என்று சொன்னால், ‘பாரத் நெட்’ டெண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பாரத் நெட் திட்ட டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய் குற்றச்சாட்டு” என்று முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். “பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு பச்சைப் பொய்யை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இத்திட்டத்திற்கு 4 “பேக்கேஜ்களாக” ஆன்லைன் டெண்டர் 5-12-2019 அன்றே கோரப்பட்டு அதை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 20-ந்தேதியுடன் முடிந்துவிட்டது. 22-1-2020 அன்று அந்த டெண்டர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு அந்த தேதியும் முடிந்து விட்டது. பிறகு எப்படி அமைச்சர் இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் சொல்கிறார்?.

‘பாரத் நெட்’ திட்ட டெண்டரில் அசிங்கமான கூத்துகளை அடித்துவிட்டு தனது துறைச் செயலாளர், நிர்வாக இயக்குநர் எல்லோரையும் சதித் திட்டமிட்டு மாற்றிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் அமைச்சர் கூறலாம். ஆனால் கோப்புகள் உண்மையை இப்போது மட்டுமல்ல எப்போதும் பேசும் என்பதை உதயகுமார் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது நல்லது.

‘பாரத் நெட்’ டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால் இந்த டெண்டர் தகவல் தொழில்நுட்பத் துறையின் 9-வது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே உதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன். ‘பாரத் நெட்’ டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22-1-2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘பாரத் நெட்’ டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? தகவல் தொழில்நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் மற்றும் முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? ‘பாரத் நெட்’ டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சரே வெளியிடத் தயாரா?.

அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான ‘பாரத் நெட்’ டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால் அ.தி.மு.க. ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும்.

இன்று ‘அதிகார போதையில்’ இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் தி.மு.க. தலைவர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story