குரூப்-4 முறைகேடு : துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் -மு.க.ஸ்டாலின் அறிக்கை


குரூப்-4 முறைகேடு : துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் -மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2020 5:33 AM GMT (Updated: 30 Jan 2020 5:33 AM GMT)

குரூப்-4 முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது.

அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரத்தில் திமிங்கலங்களை விடுத்து மீன் குஞ்சுகளை பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ஏதோ ஒரு சிறிய ரிக்கார்டு கிளார்க் மூலம் இந்த இமாலய தேர்வு முறைகேடு நடந்து விட்டதாக மூடி  மறைக்காமல், எத்தனை தேர்வுகளில் இவ்வாறு முறைகேடு நடந்துள்ளது என்பதை விசாரிக்க வேண்டும்.

குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட, இந்த விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story