2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Jan 2020 7:38 AM GMT (Updated: 2020-01-30T13:08:54+05:30)

எங்கள் மீது 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சப்போவதில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது அறிக்கைகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக விமர்சித்து வருகிறார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிற அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் தர வரிசை பட்டியலில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து கடந்த 28.12.2019 அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை முரசொலி பத்திரிகையில் வெளியானது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அவர், என் மீது  போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நான் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “2 வழக்குகள் அல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் நாங்கள் அஞ்சமாட்டோம். மிசாவையே கண்டவர்கள் நாங்கள். உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம்” என்று கூறினார்.

Next Story