தொழிற்சாலைகள் அமைக்க 30 நாட்களுக்குள் வேளாண்மை தடையில்லா சான்று வழங்கப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தொழிற்சாலைகள் அமைக்க 30 நாட்களுக்குள் வேளாண்மை தடையில்லா சான்று வழங்கப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 12:00 AM GMT (Updated: 30 Jan 2020 7:16 PM GMT)

தொழிற்சாலைகளை அமைப்பதற்கான வேளாண்மை துறையின் தடையில்லா சான்று 30 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, 

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கடந்த 125 ஆண்டுகளாக தேசிய சேவையாற்றி வருகிறது. அதற்கான கொண்டாட்டத்தின் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

வளர்ச்சிப்பாதையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உற்ற தோழனாகவும், ஆலோசகராகவும் சி.ஐ.ஐ. தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடுகளை சிறப்பான முறையில் நடத்தியதில், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆற்றிய பங்கு மகத்தானது.

கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தொழிற்சாலைகளுக்கு உரிய காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், சுய சான்றின் அடிப்படையில் கட்டுமானப்பணிகளை தொடங்கலாம் என்ற திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

தொழில் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பச்சை வகைப்பாடு தொழிற்சாலைகளை இயக்குவதற்கான அனுமதியை நேரடியாக வழங்கும் ‘டைரக்ட் சி.டி.ஓ.’ என்ற திட்டத்தை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதன்படி, தொழில் பூங்காக்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில், தொழில் தொடங்கும் பச்சை வகைப்பாட்டு நிறுவனங்கள், அதனை நிறுவுவதற்கான அனுமதி பெற, கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தால் போதும். அனுமதியை பெற காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வகையான நிறுவனங்கள் சுயசான்றின் அடிப்படையில், கட்டுமானப்பணிகளை தொடங்கலாம். இயக்குவதற்கான அனுமதி மட்டும் பெற்றாலே போதுமானது.

ஏற்கனவே வெள்ளை வகைப்பாட்டு தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற வேண்டியதில்லை என்ற நடைமுறை உள்ளது. தமிழக அரசின் இப்புதிய திட்டம் மூலம், பச்சை வகைப்பாட்டில் உள்ள மேலும் 63 வகை தொழிற்சாலைகள் பயன்பெறும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தரத்தொழில்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும், நகர் ஊரமைப்பு திட்டம் இல்லாத பகுதிகளில், தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச்சாளர முறையில், காலவரையறைக்கு உட்பட்டு வழங்கும் புதிய நடைமுறையையும் இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒற்றைச்சாளர முறையில், இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டு, அதிகபட்சம் 50 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இல்லாவிட்டால், நில வகைப்பாடு மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதி, அந்நிறுவனம் பணிகளை தொடங்கலாம்.

இத்திட்டத்தின் பயனாக, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு, அதிகபட்சம் 30 நாட்களுக்குள் வேளாண்மை துறை தடையில்லா சான்றும், 15 முதல் 50 நாட்களில் நில வகைப்பாடு மாற்றமும் செய்யப்படும். அதே காலகட்டத்தில் திட்ட அனுமதியும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பேசினார்.

மேலும் சி.ஐ.ஐ. கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர் விக்ரம் கிரிலோஸ்கர், தென்மண்டலத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, மாநிலத் தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

Next Story