மாநில செய்திகள்

ராணிமேரி கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார் + "||" + Additional classrooms at Ranimarie College

ராணிமேரி கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

ராணிமேரி கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
சென்னை ராணிமேரி கல்லூரியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
சென்னை,

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி திறக்கப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கல்லூரிக்கு கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாக கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, உலகநாத நாராயணசாமி அரசு கலை கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் பணியாளர் அறை; சென்னை ராணிமேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், 2 ஆய்வகங்கள் மற்றும் பணியாளர் அறை;

சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கல்விசார் கட்டிடங்கள் மற்றும் பொருள் செயலாக்க விநியோக மையத்திற்கான கூடுதல் கட்டிடங்கள், சேலம், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள், கோவை அரசு பொறியியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கான கூடுதல் கட்டிட தொகுதி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டிகள்; திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டிடங்கள்;

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி இயக்ககத்திற்கென கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், அலுவலக அறைகள் மற்றும் கழிவறைகள் ஆகியவை உள்ளடக்கிய வெள்ளிவிழா கட்டிடம்;

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான கூடுதல் விடுதி கட்டிடம்; ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் மற்றும் 3 கழிவறைத் தொகுதிகள்;

தூத்துக்குடி - அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள நவீன சமையல் அறையுடன் கூடிய உணவகம், என மொத்தம் 91 கோடியே 91 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மையக் கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல் மாநிலம் முழுவதும் 37 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை அவர் திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.