தொழில் நிறுவனங்கள்-தொழிலாளர்கள் நல்லுறவு கருத்தரங்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் தொடங்கி வைத்தார்


தொழில் நிறுவனங்கள்-தொழிலாளர்கள் நல்லுறவு கருத்தரங்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:15 PM GMT (Updated: 30 Jan 2020 7:42 PM GMT)

தொழில் நிறுவனங்கள்-தொழிலாளர்கள் நல்லுறவு கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

சென்னை, 

மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ்(எம்.சி.சி.ஐ.) சார்பில் தொழில் மேம்பாடு மற்றும் தொழில் நிறுவனங்கள்-தொழிலாளர்கள் நல்லுறவு குறித்த கருத்தரங்கு சென்னை நந்தனத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ராம்குமார் வரவேற்றார்.

கருத்தரங்கை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவரும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டியுள்ளது. உற்பத்தி துறையை பொறுத்தமட்டில் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது.

தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே எப்போதும் இணக்கமான சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை தொழில் நிறுவனங்களின் நல்லுறவு அதிகாரிகள் தான் கவனமாக கையாள வேண்டும். நேர்மையான, வெளிப்படையான புரிதல் உணர்வோடு தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

நிறுவனங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தொழிலாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதன்மூலம் எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் அதற்கு எளிதாக தீர்வு காண முடியும்.

தொழில்நுட்பம் வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை அவ்வப்போது அளிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தொழில் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் நல்லுறவு அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு என்.சீனிவாசன் பதில் அளித்தார்.

கருத்தரங்கில் தொழில் நிறுவன உயர்அதிகாரிகள் கலந்து கொண்டு நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினர்.

தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியம், மனதளவில் தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உளவியல் பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

முடிவில், மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் வல்லுனர் குழு(மனித வள மேம்பாடு மற்றும் நல்லுறவு) தலைவர் பேராசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Next Story