போலீஸ் கமிஷனர் முத்திரையை தயாரித்து துணிகர மோசடி பெட்ரோல் பங்க் அதிபர் கைது


போலீஸ் கமிஷனர் முத்திரையை தயாரித்து துணிகர மோசடி பெட்ரோல் பங்க் அதிபர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2020 10:00 PM GMT (Updated: 30 Jan 2020 7:45 PM GMT)

போலீஸ் கமிஷனரின் அச்சு முத்திரையை போலியாக தயாரித்து துணிகர மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் ‘பங்க்’ அதிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

புதிதாக பெட்ரோல் பங்க்குகள், கியாஸ் நிலையங்களை திறப்பதற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி, போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் ஆகியோர் பரிந்துரையை பெற்று துணை கமிஷனரிடம் (நிர்வாகம்) இருந்து தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறுவது அவசியம் ஆகும்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இந்த தடையில்லா சான்றிதழை சரி பார்த்து அனுமதி வழங்குவார்கள். இந்தநிலையில் திருவொற்றியூர், குன்றத்தூர் பகுதிகளில் புதிதாக கியாஸ் பங்குகள் திறப்பதற்கு தடையில்லா சான்று போலியாக தயாரித்து பெறப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். இதில் சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகளை நடத்தி வரும் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சிவக்குமார்(வயது 47) என்பவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெயரில் உள்ள அச்சு முத்திரை(சீல்), துணை கமிஷனரின் (நிர்வாகம்) கையெழுத்து ஆகியவற்றை கம்ப்யூட்டரில் போலியாக உருவாக்கி இந்த தடையில்லா சான்றிதழை தயாரித்து வழங்கியது தெரியவந்தது.

மேலும் அவர் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலியான தடையில்லா சான்றிதழ் வழங்கி துணிகர மோசடியில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் இந்த மோசடி செயலில் அவருக்கு உடந்தையாக இருந்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த முகேஷ்(28), அகரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(49), சுரேஷ்(50), பெரியார் நகரை சேர்ந்த ரமேஷ் பாபு (45) ஆகிய 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் கமிஷனரின் அச்சு முத்திரை, துணை கமிஷனரின் கையெழுத்து போலியாக தயாரித்து, மோசடி நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பெட்ரோல் பங்க்குகள், கியாஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழை சோதனை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story