மாநில செய்திகள்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு + "||" + Kumbabishekha Festival at Tanjay Periyakovil

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், 

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகன நிறுத்துமிடமும், பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில்(புதுப்பட்டினம்), புதிய பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து பக்தர்கள் கோவிலின் சற்று தொலைவு வரை அழைத்து வருவதற்காக 175 பள்ளி-கல்லூரி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வயதானவர்கள், முதியோர்களை அழைத்துச்செல்ல 30 பேட்டரி கார்களும் இயக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 125 சக்கர நாற்காலியும் பயன்படுத்தப்படுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

17 இடங்களில் போலீஸ் உதவி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. 55 இடங்களில் தகவல் அறிவிப்பு மையங்களும் ஏற்படுத்தப்படுகிறது.

தென்னக பண்பாட்டு மையம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை சார்பில் 5 இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் ஓய்வு எடுப்பதற்கான அறையும் அமைக்கப்படுகிறது.

மேலும் பக்தர்கள் செல்லும் வழி உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்காக நம்ம தஞ்சை செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

5-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். 5-ந் தேதி மட்டும் இது நடைமுறையில் இருக்கும். யாகசாலை நடைபெறும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் 4-ந் தேதியில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும். கும்பாபிஷேக விழாவுக்கு யாகசாலை பூஜை தொடங்கும் நாளில் இருந்து 5 நாட்களிலும் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கும்பாபிஷேகத்தை யொட்டி தஞ்சை பெரியகோவில் அனைத்து கோபுர கலசங்களும் சுத்தப்படுத்தப்பட்டு, தங்கமுலாம் பூசும் பணி நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து விமான கோபுர கலசம் நேற்று மீண்டும் பொருத்தப்பட்டது. மற்ற கோபுரகலசங்கள் அடுத்தடுத்து பொருத்தப்படும்.