மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி கைது


மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி கைது
x
தினத்தந்தி 30 Jan 2020 10:00 PM GMT (Updated: 30 Jan 2020 8:26 PM GMT)

மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தம்பதியும் சிக்கினர்.

நாகை, 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம்(வயது 38). அ.ம.மு.க.வை சேர்ந்தவர். காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் முகேஷ்கண்ணன்(20). இவரும், 21 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒன்றாக ஐ.டி.ஐ. படித்தபோது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

படித்து முடித்த பிறகு இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தனர். மகன் காதலிப்பதை கருப்பு நித்யானந்தம் விரும்பவில்லை. அவர்கள் காதலை துண்டிக்க அவர் ரகசியமாக திட்டமிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பு நித்யானந்தம், தனது மகனின் காதலி வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை தனியாக சந்தித்தார். தன்னுடன் வந்தால் மகனுக்கு அவரை திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளார்.

இதை நம்பி அந்த பெண், அவருடன் சென்றார். ஆனால் கருப்பு நித்யானந்தம் தனது மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்காமல் செம்போடை பகுதிக்கு காரில் கடத்தி சென்று அங்கு உள்ள ஒரு கடையில் வைத்து, மிரட்டி அந்த பெண்ணுக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவருடைய வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இந்த நிலையில் அந்த பெண் அந்த வீட்டில் இருந்து தப்பிச்சென்று வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பு நித்யானந்தம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47), அவரது மனைவி பவுன்ராஜவள்ளி(38) ஆகியோர் செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம், சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்டில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க வேதாரண்யம் மாஜிஸ்திரேட்டு லிசி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story