குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு


குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 31 Jan 2020 8:32 AM GMT (Updated: 31 Jan 2020 9:39 AM GMT)

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு  முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது.

அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் நீலமேகம் மற்றும் முகமது ரிஸ்வி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இது குறித்து சி.பி.ஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இது பற்றி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இருந்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story