"கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை" - சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர் பரபரப்பு பேட்டி


கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை - சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 31 Jan 2020 2:22 PM GMT (Updated: 2020-01-31T19:52:30+05:30)

கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை என சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய சந்திரசேகரன் என்ற தமிழக மாணவர் கூறியுள்ளார்.

சென்னை,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய  கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி  உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக  பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது.

சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப சீன அரசு உத்தரவிட்டதால் ஜனவரி 26ஆம் தேதி சென்னை வந்த மாணவர் சந்திரசேகரன், மருத்துவ பரிசோதனைக்கு பின் சொந்த ஊரான ஓசூருக்கு வந்துள்ளார்.

ஊருக்கு திரும்பிய சந்திரசேகரன், தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

Next Story