கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த 10 மாணவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை


கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த 10 மாணவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 1 Feb 2020 8:24 PM GMT (Updated: 2020-02-02T01:54:47+05:30)

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

நாகர்கோவில், 

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவ - மாணவிகள் சீனாவில் உகான் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகமாக இருந்து வரும் பகுதிகளில் இந்த உகான் நகரமும் ஒன்று ஆகும்.

இந்தநிலையில் அந்த மாணவ - மாணவிகள் 5 பேரும் சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து குமரி மாவட்டம் திரும்பியுள்ளனர். 5 பேரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இதையடுத்து டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் சீனாவில் படிக்கும் மாணவர்கள் 5 பேரிடமும் உள்ளதா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு, அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 14 நாட்களுக்கு பிறகு தான் தெரிய வரும் என்பதால் 5 பேரையும் அவரவர் வீடுகளுக்குச் சென்று தங்கியிருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

சீனாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு 5 மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர். தற்போது அவர்கள் தங்களது வீடுகளில் உள்ளனர். ஆனாலும் அவர்களை சுகாதாரத்துறையினர் தினமும் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு காய்ச்சல், தும்மல் போன்றவை வருகின்றனவா? என்பதை கவனித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

சீனாவின், லியோனிங் மாகாணம், டாலியன் நகரத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 8-ந்தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். சீனாவில் இருந்து நேரடியாக மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவிற்கு சுற்றுலா வந்த அவர்கள், கடந்த 20-ந் தேதி கோவைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சளித்தொல்லை இருந்ததால் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் அவர்கள் 4 பேரும் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story