ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு? - கூடுதல் அறிக்கை கேட்டு அரசு உத்தரவு


ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு? - கூடுதல் அறிக்கை கேட்டு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 4 Feb 2020 9:15 PM GMT (Updated: 4 Feb 2020 7:16 PM GMT)

தமிழக கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அந்தோணிசாமி ஜான்பீட்டர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, 

பொதுவினியோகத் திட்டத்தின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு சமவேலை, சம ஊதிய நிர்ணயம் என்ற கோட்பாட்டின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது பற்றி பரிசீலிப்பதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் அரசால் கூடுதல் விபரங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை முறையற்ற வகையில் பணி நியமனம் செய்யப்பட்டு, பணிவரைமுறை செய்யப்படாத ரேஷன் கடை பணியாளர்களின் (விற்பனையாளர் மற்றும் கட்டுனர்) மாவட்ட வாரியான மொத்த எண்ணிக்கை; பணிவரைமுறை செய்யக்கோரும் ரேஷன் கடை பணியாளர்கள் (விற்பனையாளர் மற்றும் கட்டுனர்) எந்த ஆண்டு யாரால் நியமனம் செய்யப்பட்டனர்? இவர்களை பணிவரைமுறை செய்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு எவ்வளவு?

முறையற்ற நியமனங்களை செய்யும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் முறையற்ற வகையில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களை நியமனம் செய்தது எப்படி? இந்த நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது போன்ற விவரங்களை 15-ந் தேதிக்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story