தி.மு.க.வில் கோவை மாநகர் மாவட்டம் இரண்டாக பிரிப்பு: மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி நியமனம்


தி.மு.க.வில் கோவை மாநகர் மாவட்டம் இரண்டாக பிரிப்பு: மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி நியமனம்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:15 PM GMT (Updated: 4 Feb 2020 9:49 PM GMT)

தி.மு.க.வில் கோவை மாநகர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, 

நிர்வாக வசதிக்காக கோவை மாநகர் மாவட்டம், கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. 57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் தற்போதைய கோவை மாநகர் மாவட்டத்தில் மேலும் 14 வார்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு 71 வார்டுகள் கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் அமையும்.

அதாவது, கோவை தெற்கு தொகுதியில் உள்ள 19 வார்டுகள், சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள 19 வார்டுகள், கோவை வடக்கு தொகுதியில் உள்ள 19 வார்டுகள், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உள்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்தில் உள்ள 7 வார்டுகள், குனியமுத்தூர் பகுதி கழகத்தில் உள்ள 7 வார்டுகள் என மொத்தம் 71 வார்டுகள் கொண்டதாக புதிய கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் அமைவதோடு, அதன் பொறுப் பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தொடர்ந்து செயல்படுவார்.

புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக மு.முத்துசாமி நியமிக்கப்படுகிறார். இதில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள 11 வார்டுகள், சரவணம்பட்டி பகுதியில் உள்ள 11 வார்டுகள், குறிச்சி பகுதியில் உள்ள 7 வார்டுகள் என மொத்தம் 29 வார்டுகள் கொண்டதாக கோவை மாநகர் மேற்கு மாவட்டம் அமைகிறது.

மேற்கண்ட கோவை மாநகர் கிழக்கு மற்றும் கோவை மாநகர் மேற்கு ஆகிய 2 மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதி, வட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர கழகங்கள் கொண்டதாகவும், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளராக சி.ராமச்சந்திரன் தொடர்ந்து செயல்படுவார். இதில், மேட்டுப்பாளையம் தொகுதியில், மேட்டுப்பாளையம் நகரம், காரமடை கிழக்கு, காரமடை மேற்கு ஆகிய பகுதிகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளும் இடம் பெறுகிறது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை தெற்கு மாவட்டத்தில், வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட ஒன்றிய, நகர கழகங்கள் கொண்டதாகவும், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் தொடர்ந்து செயல்படுவார்.

இதில், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் வால்பாறை நகரம், ஆனைமலை ஒன்றியம் ஆகிய பகுதிகளும், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு மேற்கு (பாதி) ஆகிய பகுதிகளும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் (பாதி), மதுக்கரை ஒன்றியம் ஆகிய பகுதிகளும், சூலூர் சட்டமன்ற தொகுதியில் சூலூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், சுல்தான்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளும் இடம் பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story