"ரஜினிக்கு அரசியல் புரியவில்லை" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


ரஜினிக்கு அரசியல் புரியவில்லை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 5 Feb 2020 12:30 PM GMT (Updated: 5 Feb 2020 12:30 PM GMT)

ரஜினிக்கு இன்னும் அரசியல் புரியவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். 

ரஜினி பேசியது குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லை என ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, 'நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் புரியவில்லை. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாடு முழுக்க உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் முதலில் கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன் பின்னர் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக சார்பில் கடந்த 3 நாட்களாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story