போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு தடைகேட்ட செந்தில்பாலாஜியின் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு


போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு தடைகேட்ட செந்தில்பாலாஜியின் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு
x
தினத்தந்தி 5 Feb 2020 9:30 PM GMT (Updated: 5 Feb 2020 9:16 PM GMT)

போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு தடைகேட்ட செந்தில்பாலாஜியின் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

சென்னை, 

போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக போலீசார் முக்கிய ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு செந்தில்பாலாஜியின் வக்கீல் சரவணன் ஆஜராகி, ‘செந்தில்பாலாஜியின் சென்னையில் உள்ள வீட்டை சோதனை செய்ய உள்ளதாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், பூட்டை உடைத்து சோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், போலீசார் அதை மீறி செயல்படுகின்றனர். எனவே, இந்த சம்மனுக்கு தடை கேட்டு தொடர உள்ள வழக்கை விசாரணைக்கு உடனே ஏற்கவேண்டும்’ என்று முறையிட்டார்.

அப்போது போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முறையான அனுமதியை பெற்றுத்தான் சம்மன் அனுப்பி இந்த சோதனையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. வீட்டை செந்தில்பாலாஜியோ அல்லது அவரது பிரதிநிதியோ திறந்து விடவேண்டும் என்றுதான் சம்மனில் கூறப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘இந்த வழக்கை விசாரிக்க முடியாது. சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை அணுகலாம்’ என்று செந்தில்பாலாஜியின் வக்கீலிடம் கூறினார்.

Next Story