டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு; பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு; பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2020 2:09 PM GMT (Updated: 6 Feb 2020 2:09 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது.  இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர்.

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வந்தனர்.  அவர் இன்று சரண் அடைந்து உள்ளார்.

இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி ஆனது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்தது.  மேலும் அந்த தேர்வு தொடர்பான ஆவணங்களையும் போலீஸ் வசம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்தது.

டி.என்.பி.எஸ்.சி. தரப்பில், சுமார் 30க்கும் மேற்பட்டோர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் எழுந்ததற்கு, ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து வந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

அதே காரணம் தான் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகாரிலும் முன்வைக்கப்படுகிறது. இந்த தேர்வு முடிவு தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்து இருந்தனர்.

அவர்களில் ஒருவரான மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுவடைய செய்தது.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சுதாராணி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  விக்னேஷ் என்பவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் என்பவரின் மனைவி சுதாராணி ஆவார்.

இந்நிலையில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டுள்ளனர், முறைகேடாக தேர்ச்சி பெற்றது எப்படி? எவ்வளவு பணம் கைமாறியது என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  சென்னை தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தன், பத்திர பதிவு துறை அலுவலர் ஆனந்தன் மற்றும் வடிவு ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்.  அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் பாயும் என்று கூறினார்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  பத்திரப்பதிவு துறை உதவியாளர்களான ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு மற்றும் ஆனந்தன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Next Story