ஐகோர்ட்டு உத்தரவை போலியாக தயாரித்து ரூ.9½ லட்சம் மோசடி: வக்கீல் என்று கூறி ஏமாற்றியவர் கைது


ஐகோர்ட்டு உத்தரவை போலியாக தயாரித்து ரூ.9½ லட்சம் மோசடி: வக்கீல் என்று கூறி ஏமாற்றியவர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2020 9:00 PM GMT (Updated: 6 Feb 2020 7:45 PM GMT)

வக்கீல் என்று கூறி ஐகோர்ட்டு உத்தரவை போலியாக தயாரித்து கொடுத்து ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரை சேர்ந்த நரசிம்மன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் பெண் ஒருவருக்கும் நிலப்பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினையில் எனக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கித்தருவதாக வினோத் (வயது 24) என்பவர் என்னை அணுகினார். ஐகோர்ட்டு வளாகத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கும் அவர் தன்னை வக்கீல் என்று கூறிக்கொண்டார்.

நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து எனது நிலப்பிரச்சினைக்கு ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுத்தருமாறு வினோத்திடம் கேட்டுக்கொண்டேன். இதற்காக ரூ.9½ லட்சம் என்னிடம் இருந்து வாங்கினார்.

பின்னர் அவர் ஐகோர்ட்டு தடை ஆணை என்று கூறி ஐகோர்ட்டு முத்திரை வைக்கப்பட்ட நகல் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதுபற்றி நான் விசாரித்தபோது, அது போலியான உத்தரவு என்று தெரியவந்தது. இதுபற்றி வினோத்திடம் கேட்டபோது, அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

ஐகோர்ட்டு உத்தரவையே போலியாக தயாரித்து என்னை ஏமாற்றி ரூ.9½ லட்சம் மோசடி செய்த வினோத் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் கவுதமன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வினோத் சென்னையை அடுத்த கல்பாக்கம் புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரிந்தது. அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

Next Story